பருப்பை வேக வைக்காமல் 10 நிமிடத்தில் இந்த முறையில் பருப்பு ரசம் ஒரு முறை வைத்து பாருங்க வீடே மணக்கும்!
அவசரத்திற்கு துவரம் பருப்பை வேக வைத்து செய்யும் ரசத்தை விட, இப்படி துவரம் பருப்பை வறுத்து செய்யப்படும் ரசம் அலாதியான சுவையுடன் இருக்கும். சுலபமாக எல்லோரும் செய்யக் கூடிய வகையில் இருக்கும் இந்த பருப்பு ரசம் ஹோட்டலில் கொடுக்கும் ரசத்தை போலவே அசத்தலான சுவையில் இருக்கப் போகிறது. இது போல அடிக்கடி ரசம் வைத்துக் கொடுத்தால் சளி, கபம் போன்ற பிரச்சினைகள் நெருங்காது. வித்தியாசமான இந்த பருப்பு
ரசம் செய்வது எப்படி? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.
ரசம் வைக்க தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மல்லி விதை – கால் டீஸ்பூன், வர மிளகாய் – 3, புளி – பெரிய நெல்லிக்காய் அளவிற்கு, தக்காளி – 3, பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், பூண்டு பற்கள் – 10, கடுகு – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, மல்லித்தழை – ஒரு கைப்பிடி, சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
ரசம் செய்முறை விளக்கம்: முதலில் வறுக்க தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை எடுத்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் துவரம் பருப்பு, மிளகு, சீரகம், தனியா விதை ஆகியவற்றை சேர்த்து சூடு பறக்க லேசாக வறுத்து எடுக்க வேண்டும். பின்னர் அதே வாணலியில் வர மிளகாய்களை சேர்த்து கருக விடாமல் உப்பி வரும் அளவிற்கு இலேசாக 2 முறை வதக்கி எடுத்தால் போதும். அதனையும் மிக்ஸியில் சேர்த்து ஆற விடுங்கள்.
இப்போது ஊற வைத்த புளியை கரைத்து கொட்டைகள், திப்பிகள் இல்லாமல் வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து வையுங்கள். மிக்ஸியில் இருப்பவை நன்கு ஆறியதும் அதனை இயக்கி நன்கு கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் இறுதியாக அதில் பூண்டு பற்களை தோலுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்க வேண்டும். பூண்டை தோலுடன் சேர்த்தால் தான் ருசி அதிகமாக இருக்கும்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதே வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள்.
எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்து வந்ததும் ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி கழுவி சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் அரைத்து வைத்துள்ள ரசப்பொடியை சேர்த்து சிம்மில் வைத்து வறுக்கவும். இவற்றுடன் பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சை வாசம் போக நன்கு வதங்கியதும் 3 பழுத்த தக்காளி பழங்களை கைகளால் நன்கு பிசைந்து இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி நன்கு வதங்கியதும் அதில் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளையும் சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தும் பச்சை வாசனை போக வறுபட்டதும் அடுப்பை அனைத்து விட்டு கரைத்து வைத்த புளியுடன் சேர்க்க வேண்டும். பின்னர் அடுப்பில் வைத்து ஒரு கொதி வர இறக்கி சுடச்சுட சாதத்துடன் சாப்பிட வேண்டியது தான். ரொம்ப ரொம்ப சுலபமாக இதே முறையில் நீங்களும் பருப்பு ரசம் வைத்து வீட்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விடலாமே!
No comments:
Post a Comment