ஹோட்டல் ஸ்டைல் முறுகலான ஆனியன் ரவா தோசை போலவே வீட்டில் எப்படி செய்வது? இதே அளவுகளில் செய்தால் உங்களுக்கும் வரும் மொறுமொறு ரவா வெங்காய தோசை!
ஹோட்டல் ஸ்டைல் போலவே முறுகலான மொறு மொறு ஆனியன் ரவா தோசை செய்வது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான காரியம் அல்ல. எனினும் என்னதான் நாம் வீட்டில் முயற்சி செய்து பார்த்தும்
இது போல ஆனியன் தோசை வரவில்லையே என்று யோசிப்பவர்களுக்கு இந்த அளவுகளில் செய்து பார்த்தால் நிச்சயம் இதே ஸ்டைலில் பொன் முறுகலான சூப்பரான ஆனியன் ரவா தோசை வரும். ரவா தோசை செய்யும் பொழுது செய்யக்கூடாத தவறுகளையும், அதை எப்படி செய்வது? என்கிற குறிப்புகளையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
ஆனியன் ரவா தோசை செய்ய தேவையான பொருட்கள்: ரவை – ஒரு கப், அரிசி மாவு – முக்கால் கப், மைதா – முக்கால் கப், உப்பு – தேவையான அளவு, சர்க்கரை – ஒரு டீஸ்பூன், பொடித்த முந்திரி – ஒரு கைப்பிடி, சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, நறுக்கிய கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, தண்ணீர் – 5 கப், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – தேவையான அளவு.
ஆனியன் ரவா தோசை செய்முறை விளக்கம்: ஆனியன் ரவா தோசை முறுகலாக வருவதற்கு அதன் அளவுகள் தான் முக்கிய காரணமாக அமையும். முதலில் அளவுகளை அளப்பதற்கு ஒரு கப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அது நீங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த டம்ளர், கப்பாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அதே கப்பில் தான் எல்லா பொருட்களையும் அளவு எடுக்க வேண்டும். இப்போது ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் ஒரு கப் அளவிற்கு ரவையை தலை தட்டி எடுத்து சேருங்கள். வறுத்த ரவை, வறுக்காத ரவை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.
ஒரு கப் ரவையில் ஒரு கைப்பிடி அளவிற்கு மட்டும் ரவையை எடுத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ளுங்கள். அதை இறுதியாக சேர்க்க வேண்டும். அதே கப்பில் முக்கால் கப் அளவிற்கு மைதா மாவும், முக்கால் கப் அளவிற்கு அரிசி மாவும் சேர்க்க வேண்டும். இவற்றுடன் பொடிப் பொடியாக நறுக்கி வைத்த முந்திரி பருப்புகளை சேர்ப்பது கூடுதல் சுவையை கொடுக்கும். 1 ஸ்பூன் மட்டும் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள், அப்போது தான் பொன்னிறமாக தோசை வரும்.
பின்னர் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவி வைத்த இஞ்சி, ஒன்றிரண்டாக தட்டி வைத்த மிளகு, ஜீரகம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் மாவிற்கு தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும். ரவா தோசைக்கு தண்ணீரின் அளவும் அவசியம். எனவே அதே கப் அளவிற்கு நான்கு கப் தண்ணீரைச் சேர்த்துக் கொள்ளுங்கள். மீதமிருக்கும் ஒரு கப் தண்ணீரை இறுதியாக சேர்க்க வேண்டும்.இப்போது எல்லா பொருட்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து கொள்ள நன்கு கரண்டி அல்லது பீட்டர் வைத்து கலந்து விடுங்கள். அப்படியே அரை மணி நேரம் ஊற வைத்து விட வேண்டும். அப்பொழுது தான் ரவை தண்ணீருடன் ஊறி சாஃப்ட் ஆக மாறும். அரை மணி
நேரம் கழித்து இந்த கலவையில் தேவையான அளவிற்கு பெருங்காயத் தூள், மீதமிருக்கும் ஒரு கைப்பிடி ரவை மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தோசை கல்லை வையுங்கள். கல் சூடானதும் சிம்மில் வைத்து விட வேண்டும். அதில் தேவையான அளவிற்கு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை தூவுங்கள். வெங்காயம் பொரிந்து வரும் சமயத்தில் மாவை கலந்து மேலாக தூக்கி எல்லா இடங்களிலும் ஊற்றுங்கள். அடுப்பை குறைந்த தீயில் வைத்து தோசை முறுகலாக வேகும் வரை காத்திருக்க வேண்டும். நன்கு வெந்து பொன்னிறமாக தெரியும் பொழுது தோசையை முக்கோண வடிவில் மடித்து சுட சுட தட்டில் வைத்து சட்னியுடன் பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும். இது அளவுகளில் இதே முறையில் நீங்களும் முயற்சி செய்து பார்த்து பயனடையுங்கள்.
No comments:
Post a Comment