அரிசி மாவுடன் தயிர் கலந்து கரமுர காரத்துடன் சுவையான தயிர் முறுக்கை சுலபமாக செய்திட முடியும்
குழந்தைகள் இருக்கும் வீடுகளில் சாப்பிடுவதற்கு ஏதேனும் ஸ்நாக்ஸ் வகைகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதிலும் குழந்தைகள் கொஞ்சம் கரமுரவென இருக்கும் நொறுக்குத்தீனிகள தான் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு அவர்களுக்கு தின்பண்டங்களை கடைகளில் வாங்கிக் கொடுக்காமல் வீட்டிலேயே செய்து கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும். நமக்கும் திருப்தியாகவும், குழந்தைகள் விருப்பமாகவும் சாப்பிடுவார்கள்.
அவ்வாறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய தயிர் முருக்கை எவ்வாறு வீட்டிலேயே செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 7 டம்ளர், உளுத்தம் மாவு – ஒரு டம்ளர், எண்ணெய் – கால் கிலோ, பச்சை மிளகாய் – 15, தயிர் – அரை லிட்டர், எலுமிச்சை பழம் – 2, உப்பு – ஒன்றரை ஸ்பூன்.
செய்முறை: முதலில் ஒன்றரை டம்ளர் அளவு உளுத்தம் பருப்பை கடாயில் பொன்னிறமாக வறுத்துக் கொண்டு, அதனை மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்து ஒரு டம்ளர் அளவு இருக்குமாறு எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அரிசி மாவு எடுத்துக்கொண்டு அதனுடன் அரைத்து வைத்துள்ள ஒரு டம்ளர் உளுத்த மாவை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பிறகு 15 பச்சை மிளகாயை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவேண்டும். அதனையும் அரிசி மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
பிறகு நன்றாகப் புளித்த அரை லிட்டர் தயிரையும் இதனுடன் சேர்த்து ஒன்றரை ஸ்பூன் உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதனை லேசாகச் சுவைத்துப் பார்க்க வேண்டும். இதில் புளிப்பு சுவை குறைவாக இருந்தது என்றால் இரண்டு எலுமிச்சை பழச்சாறை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து விட்ட பின்னர் இந்த மாவு முறுக்கு பிழியும் பதத்திற்கு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் கெட்டியாக இருந்தது என்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைத்து கால் லிட்டர் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் கலந்து வைத்துள்ள மாவில் இருந்து ஒரு பிடி மாவை எடுத்து முறுக்கு குழாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு எண்ணெய் நன்றாக சூடானதும் முறுக்கு குழாயில் உள்ள மாவை எண்ணெயில் கடாய் முழுவதுமாக பிழிந்துவிட வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் இவை நன்றாக சிவந்து வரும் வரை காத்திருந்து அதன் பின்னர் கரண்டியைப் பயன்படுத்தி அவற்றை திருப்பி விட வேண்டும். இரண்டு பக்கங்களும் நன்றாக சிவந்து வெந்ததும் முறுக்கை வெளியே எடுத்து ஒரு தட்டில் வைக்க வேண்டும்.
இவ்வாறு மீதமுள்ள அனைத்து மாவையும் இதே பதத்தில் செய்து வைத்துக்கொள்ளவேண்டும். முறுக்குகள் நன்றாக ஆறியதும் இவற்றை கைகளை பயன்படுத்தி உடைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான தயிர் முறுக்கு தயாராகி விட்டது. இதனை ஒரு டப்பாவில் போட்டு எடுத்து வைத்துக்கொண்டால் போதும். ஆறு மாதங்கள் ஆனாலும் சுவையாக
அப்படியே இருக்கும். இதனை குழந்தைகளும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.
No comments:
Post a Comment