சோயா சாஸ் தக்காளி சாஸ் இல்லாமல் பாஸ்ட்ஃபுட் கடை சுவையில் வீட்டிலேயே சிக்கன் நூடுல்சை சுலபமாக செய்திடலாம்
வீட்டிலுள்ள அம்மாக்கள் என்னதான் பார்த்துப் பார்த்து சுவையாக சமைத்து கொடுத்தாலும் குழந்தைகளுக்கு கடையில் விற்கும் உணவுகள் தான் மிகவும் பிடிக்கும். அவ்வாறு நூடுல்ஸ் என்பது அனைவரும் விரும்பக்கூடிய ஒரு உணவு வகை தான். அதிலும் பாஸ்ட்ஃபுட் கடைகளில் விற்கும் நூடுல்ஸ் என்றாலே குழந்தைகளுக்கு தனிப் பிரியம் தான். ஆனால் கடைகளில் செய்யும் இந்த உணவுகள் உடலிற்கு நன்மை அளிக்கக் கூடியதாக இல்லை. இவற்றால் பல உடல் உபாதைகள்
உண்டாகின்றன. எனவே குழந்தைகளுக்குப் பிடித்த இந்த சிக்கன் நூடுல்ஸை எந்தவித சாஸும் பயன்படுத்தாமல் எவ்வாறு சுவையாக செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்: பெரிய நூடுல்ஸ் பாக்கெட் – 1, சிக்கன் – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 2, இஞ்சி பூண்டு விழுது – கால் ஸ்பூன், எண்ணெய் – 7 ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், மிளகுத் தூள் – 2 ஸ்பூன்.
செய்முறை: முதலில் அடுப்பின் மீது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொள்ள வேண்டும். அதில் அரை ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் நூடுல்ஸை அதில் சேர்க்க வேண்டும். நூடுல்ஸ் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை அனைத்து இந்த நூடுல்சை வடிகட்டி வேறு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து விட்டு அப்படியே வைத்துவிடவேண்டும்.
அதன் பின் தக்காளி மற்றும் வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு சிக்கனில் இருக்கும் எலும்பை நீக்கிவிட்டு வெறும் சதையை எடுத்து அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை வைத்து 6 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்கி, அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து, சிக்கன் நன்றாக சிவந்து வேகும் வரை கலந்து கொண்டே இருக்க வேண்டும்.
பிறகு இவற்றுடன் தக்காளி மற்றும் அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன்பின் இவற்றுடன் ஒரு எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து வதங்கியவுடன் வேக வைத்த நூடுல்ஸை சேர்த்து நன்றாக பிரட்டி விட வேண்டும்.
பின்னர் அடுப்பை அனைத்து விட்டு நூடுல்ஸ் இந்த மசாலாவுடன் ஒன்றுடன் ஒன்று ஓட்டுமாறு நன்றாக கலந்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான சிக்கன் நூடுல்ஸ் தயாராகிவிட்டது.
இதில் தக்காளி சாஸ், சோயா சாஸ் எதுவும் சேர்க்கப்படவில்லை. இவ்வாறு செய்து கொடுப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
No comments:
Post a Comment