road-side-tasty-vadacurry-recipe(இட்லி, இடியாப்பத்திற்கு வடகறி ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday, 3 October 2021

road-side-tasty-vadacurry-recipe(இட்லி, இடியாப்பத்திற்கு வடகறி )

dosa-vadakari

இட்லி, இடியாப்பத்திற்கு வடகறி இப்படி ஒருமுறை செய்து பாருங்கள், அப்படியே ரோட்டுக்கடை வடகறி போல அசத்தலான சுவையில் இருக்கும்!


இட்லி, இடியாப்பம், ஆப்பத்திற்கு தொட்டுக் கொள்ள சுவையான வடகறி மட்டும் பெரிய பெரிய ஹோட்டல்களை விட, ரோட்டு கடைகளில் கிடைக்கக்கூடிய சாதாரணமான வடகறி அலாதியான சுவையில் இருக்கும். ஒரு சில வீடுகளில் எல்லாம் இட்லி மட்டும் சுட்டு வைத்துக் கொண்டு, இது போன்ற ரோட்டு கடைகளில் விற்கும் வடகறியை தொட்டுக் கொள்ள வாங்கிக் கொள்வார்கள். அதே சுவையுடன் கூடிய ரோட்டுக்கடை வடகறியை நாமும் எப்படி வீட்டிலேயே செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

வடகறி செய்ய தேவையான பொருட்கள்: வடைக்கு: கடலைப் பருப்பு – 200 கிராம், பெருங்காயத் தூள் – அரை டீஸ்பூன், காஞ்ச மிளகாய் – 5, பச்சை மிளகாய் – ஒன்று, சோம்பு – அரை டீஸ்பூன், இஞ்சி – ஒரு துண்டு, கறிவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவு, சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி அளவிற்கு, மல்லி தழை – சிறிதளவு, எண்ணெய் – தேவையான அளவு. கிரேவிக்கு: சோம்பு – ஒரு டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, கிராம்பு – 4, ஏலக்காய் – 2, பட்டை – 1, கருவேப்பிலை – ஒரு கொத்து, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு பல் – 10, சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் – 2, தக்காளி – 2, மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், தனி மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன், மல்லி தூள் – 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன். அரைக்க: தேங்காய் துருவல் – ஒரு கப், சோம்பு – ஒரு டீஸ்பூன், கசகசா – ஒரு டீஸ்பூன் கிராம்பு – 2, பட்டை – 2, ஏலக்காய் – 2.

வடகறி செய்முறை விளக்கம்: முதலில் வடைக்கு தேவையான கடலைப் பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மற்ற தேவையான பொருட்களை பிறகு தயார்படுத்தி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கடலைப் பருப்பு நன்கு ஊறியதும் தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், சோம்பு, தட்டிய இஞ்சி, கருவேப்பிலை பின்னர் அதற்கு தேவையான உப்பு கலந்து ஒன்றும் இரண்டுமாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வடை சாப்பிடும் பொழுது ஆங்காங்கே பருப்புகள் தட்டுபட வேண்டும், எனவே ரொம்ப நைசாக அரைக்க கூடாது.

அரைத்து எடுத்த மாவுடன், ஒரு கைப்பிடி அளவிற்கு சின்ன வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் சிறு சிறு உருண்டைகளாக தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை மீடியமாக வைத்துக் கொண்டு ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து வடை போல தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அனைத்து வடைகளையும் பொரித்து எடுத்த பின், சூடு ஆறிய பின்பு அதனை உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் மிக்ஸி ஜாரில் ஒரு கப் தேங்காய் துருவலுடன், சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து தாளிக்க தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். சோம்பு, பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை ஆகியவற்றை தாளித்தம் செய்து, ஒரு கொத்து கறிவேப்பிலை, இடித்த இஞ்சி, நசுக்கிய பூண்டு பற்கள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இவற்றின் பச்சை வாசம் போக வதங்கியபின் ஒரு கைப்பிடி அளவிற்கு சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் வதங்கிய பின்பு தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி மசிய வதங்கிய பின்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்னர் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மசாலா வாசம் போக கொதிக்க விடுங்கள். அதன் பிறகு உதிர்த்து வைத்துள்ள வடைகளை பாதி அளவிற்கு சேர்த்து வதக்க வேண்டும். மீதி வடைகளை இறுதியாக சேர்த்துக் கொள்ளலாம். நீர் சுண்ட வதக்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை ஊற்ற வேண்டும், தேவையான அளவிற்கு தண்ணீரை ஜாரில் ஊற்றி கழுவி இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். எந்த அளவிற்கு தண்ணீர் சுண்டி வடகறி கெட்டியான பதத்திற்கு வருகிறதோ, அந்த அளவிற்கு வடகறியின் சுவை அதிகரிக்கும். கிரேவி பதத்திற்கு சுண்டி எண்ணெய் தெளிய மேலே பிரிந்து வந்ததும், உதிர்த்து வைத்துள்ள மீதி வடைகளையும் சேர்த்து ஒரு கிளறு கிளறி சுட சுட இறக்கிப் பரிமாற வேண்டியது தான். ரோட்டுக்கடை வடகறியின் அலாதியான சுவையில் இந்த வடகறியை நம் வீட்டிலேயே நம் கைகளால் செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடலாம்.

No comments:

Post a Comment