வாயில் வைத்தவுடன் கரையக்கூடிய இந்த பாரம்பரிய நெய் அப்பத்தை நீங்களும் ஒருமுறை செய்து தான் பாருங்களேன்
என்னதான் பீட்சா, பர்கர், பாஸ்ட்ஃபுட் பிரியாணி இது போன்ற உணவுகள் இருந்தாலும் நமது பாரம்பரிய சுவையில் இருக்கும் உணவுகளின் சுவைக்கு இவை எதுவுமே ஈடாகாது. இன்றைய நவீன அவசர உலகத்தில் கிடைத்ததை சாப்பிட்டு வேலைக்குச் சென்று தங்களின் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருப்பவர்களுக்கு பல நேரங்களிலும் தோன்றும் நமது
அம்மாவின் கை பக்குவ உணவு இல்லையே, பாட்டியின் கைப்பக்குவத்தின் சுவை இதில் இல்லையே என்று. அவ்வாறு நமது பாரம்பரிய உணவுகளுக்கு என்று தனி சுவை இருக்கிறது. அந்த வகையில் சுவை மிகுந்த பாரம்பரிய நெய் அப்பத்தை எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்: அரிசி மாவு – ஒரு கப், வெல்லம் – ஒரு கப், பழுத்த வாழைப்பழம் – 2, நெய் – 50 கிராம், சோடா உப்பு – கால் டீஸ்பூன், தேங்காய் – 2 சில்லு, உப்பு – ஒரு சிட்டிகை, ஏலக்காய்த் தூள் – அரை ஸ்பூன்.
செய்முறை: முதலில் இரண்டு வாழைப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் 100 கிராம் வெல்லத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பின் மீது வைத்து வெள்ளம் நன்றாக கரையும் வரை கொதிக்க விட வேண்டும். பின்னர் 2 சில் தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
அதன்பின் கொதித்த வெல்லக் கரைசலை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த வெல்லக் கரைசலுடன் அரைத்து வைத்துள்ள வாழைப் பழ பேஸ்ட்டை சேர்த்து அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
பின்னர் இவற்றுடன் ஒரு கப் அரிசி மாவு, அரை ஸ்பூன் ஏலக்காய்த்தூள் மற்றும் கால் ஸ்பூன் சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள தேங்காயையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பை பற்ற வைத்து குழிப்பணியாரக் கல்லை அடுப்பின் மீது வைத்து, கல் சூடானதும் ஒவ்வொரு குழியிலும் நெய் தடவிக் கொள்ள வேண்டும். பின்னர் கலந்து வைத்துள்ள மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து இந்த குழிப் பணியாரக் குழியில் ஊற்ற வேண்டும். சிறிது நேரத்தில் பணியாரத்தின் ஒரு பக்கம் நன்றாக சிவந்ததும் மறுபக்கத்தையும் திருப்பிவிட வேண்டும். அவ்வாறு 2 பக்கங்களும் நன்றாக சிவந்து வெந்ததும் ஒவ்வொன்றாக வெளியே எடுக்க வேண்டும். பின்னர் மீதமுள்ள மாவையும் இவ்வாறு பணியாரம் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் பாரம்பரிய சுவையில் அற்புதமான நெய் அப்பம் தயாராகிவிட்டது.
இதனை மாலை நேரத்தில் டீ குடிக்கும் பொழுது அதனுடன் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். உங்கள் மாலைப் பொழுது மிகவும் இனிமையாக இருக்கும்.
No comments:
Post a Comment