முட்டைக்கோஸ் சுத்தமாக பிடிக்காதவர்கள் கூட இப்படி செஞ்சு கொடுத்தா வேணாம்னு சொல்லாம நிச்சயம் சாப்பிடுவாங்க!
சில பேருக்கு முட்டைகோசு மிகவும் பிடிக்கும். ஆனால் பலருக்கு முட்டைக்கோசு என்றாலே ஒரு விதமான அலர்ஜி தான். அதில் வரும் வாடை தான் அவற்றை தவிர்க்கவும் காரணமாக இருக்கிறது. இப்படி முட்டைகோசு சுத்தமாக பிடிக்காதவர்களுக்கு கூட இந்த முறையில் வித்தியாசமாக செய்து கொடுத்தால் நிச்சயம் வேண்டாம் என்று தவிர்க்காமல் இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு கேட்டு சாப்பிடுவார்கள். முட்டைக்கோசு வாசம் வராமல் அதில் ஒரு சில பொருட்களை அரைத்து சேர்த்து இப்படி ஒருமுறை
செய்து பாருங்கள். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
முட்டைக்கோஸ் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்: முட்டைக்கோஸ் – 300 கிராம், சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன், வர மிளகாய் – 2, கருவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, அரைக்க: பூண்டு – 3 பல், சீரகம் – ஒரு டீஸ்பூன், வர மிளகாய் – 2, துருவிய தேங்காய் – 3 டீஸ்பூன், உடைத்த கடலை – மூன்று டேபிள் ஸ்பூன்.
முட்டைகோஸ் பொரியல் செய்முறை விளக்கம்: முதலில் 300 கிராம் அளவிற்கு முட்டைகோஸ் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நீளவாக்கில் துருவி எடுத்துக் கொள்வது நன்றாக இருக்கும். இல்லையேல் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் பொரியலுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 3 பல் பூண்டு தோல் உரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் சீரகம், வர மிளகாய், தேங்காய், உடைத்த கடலை ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீர் விடாமல் கொர கொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் 2 வரமிளகாய்களை கில்லி சேர்த்துக் கொள்ளுங்கள், அதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை கழுவி உருவி சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் வெட்டி வைத்துள்ள முட்டைகோஸ் சேர்த்து நன்கு பிரட்டி விடுங்கள். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். உப்பு எல்லா இடங்களிலும் கலந்து நன்கு தாளிப்புடன் முட்டைக்கோஸ் பிராட்டி விட வேண்டும். பின்னர் ஒரு மூடி போட்டு ஐந்து நிமிடம் மூடி வைத்து விடுங்கள். தண்ணீர் எதுவும் சேர்க்க தேவையில்லை. அந்த எண்ணெயின் சூட்டிலேயே முட்டைகோஸ் நன்கு வெந்து விடும்.
முக்கால் பதம் அளவிற்கு முட்டைகோஸ் வெந்த பிறகு மூடியைத் திறந்து,
நீங்கள் அரைத்து வைத்துள்ள பொடியை தூவி ஒருமுறை நன்கு கலந்து விடுங்கள். பின்னர் முட்டைகோஸை நன்கு வேக 5 நிமிடம் கலந்து விட்டுக் கொண்டே இருந்தால் போதும். முட்டைகோஸ் நன்கு வெந்ததும் அதில் பொடிப் பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்து ஒரு முறை பிரட்டி விடுங்கள். அவ்வளவுதான் ரொம்ப ரொம்ப ஈஸியான முறையில் முட்டைகோசு பொரியல் தயாராகிவிட்டது. நீங்களும் இதே முறையில் செய்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.
No comments:
Post a Comment