தீபாவளி ஸ்பெஷல்: ருசியான... செட்டிநாடு சுழியம்
தேவையான பொருட்கள்:
உள்ளே வைப்பதற்கு...
* கடலை பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 3/4 கப் (பருப்பு வேக வைப்பதற்கு)
* வெல்லம் - 1/2 கப்
* தண்ணீர் - 1/4 கப் (வெல்லத்தைக் கரைப்பதற்கு)
* துருவிய தேங்காய் - 1/3 கப்
* ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
வெளி லேயருக்கு...
* பச்சரிசி - 1/2 கப்
* உளுத்தம் பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் பச்சரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்து நன்கு கழுவி, மிக்ஸர் ஜாரில் போட்டு, சிறிது சிறிதாக நீர் சேர்த்து, கெட்டியான பேஸ்ட் போல் மென்மையாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மாவானது கெட்டியாக இருக்க வேண்டும். எனவே அரைக்கும் போது அதிகமாக நீர் சேர்த்து விடாதீர்கள்.
* பின் அரைத்த மாவை ஒரு பௌலில் போட்டு, அதில் சிறிது உப்பு சேர்த்து சிறிது நீர் சேர்த்து, கலந்து கொள்ள வேண்டும். மாவின் பதமானது
மிகவும் கெட்டியாகவும் இருக்கக்கூடாது, மிகவும் நீர் போன்றும் இருக்கக்கூடாது. அதற்கேற்ப மாவை தயார் செய்து கொள்ளுங்கள்.
* பின்பு ஒரு வாணலியில் வெல்லம் மற்றும் நீர் சேர்த்து அடுப்பில் வைத்து, வெல்லத்தை உருக வைக்க வேண்டும். வெல்லம் நன்கு கரைந்த பின், அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
* பிறகு குக்கரில் கடலைப் பருப்பைப் போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து குக்கரை மூடி, மிதமான தீயில் 6 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
* அடுத்து ஒரு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், துருவிய தேங்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் வேக வைத்துள்ள கடலைப் பருப்பையும் சேர்த்து நன்கு வதக்கி, பின் மத்து கொண்டு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வெல்லப் பாகுவை வடிகட்டி ஊற்றி, கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும். நன்கு கெட்டியானதும், அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
* கலவையானது ஓரளவு வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போது, அதை சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
* இறுதியில் ஒரு
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள கடலை பருப்பு உருண்டையை மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்படி அனைத்து உருண்டைகளையும் பொரித்து எடுத்தால், சுவையான செட்டிநாடு சுழியம் தயார்.
No comments:
Post a Comment