சர்க்கரை நோயாளிகளுக்கான... சோயா மெத்தி சப்ஜி
சோயா மெத்தி சப்ஜி ஒரு எளிமையான ஒரு சப்ஜி. இது வெந்தயக் கீரை மற்றும் மீல் மேக்கர் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான ரெசிபி. இது ஒரு அற்புதமான சைடு டிஷ் கூட. வெந்தயக் கீரை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மீல் மேக்கரில் புரோட்டீன் அதிகமாக உள்ளது மற்றும் இது சுவையானதும் கூட. இந்த இரண்டையும் சேர்த்து செய்யப்படும் சோயா மெத்தி சப்ஜி சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற ஒரு ஆரோக்கியமான ரெசிபி.
தேவையான பொருட்கள்:
* மெத்தி/வெந்தயக் கீரை - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* மீல் மேக்கர் - 1 கப்
* கடுகு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1 இன்ச்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
* பொடித்த வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மீல் மேக்கரை நன்கு கொதித்த சுடுநீரில் போட்டு நன்கு 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் உள்ள நீரை வெளியேற்றிவிட்டு, மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, பிரியாணி இலை, சீரகம், சேர்த்து தாளிக்கவும்.
* பிறகு நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு ஒரு நிமிடம் வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கியதும், அதில் வெந்தயக் கீரையைப் போட்டு 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள், மாங்காய் தூள் மற்றும் வெல்லத்தை சேர்த்து, அதோடு மீல் மேக்கரையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். மசாலா அனைத்தும் மீல் மேக்கரில் ஒன்று சேரும் வரை 3-4 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.
* இறுதியில் உப்பு சுவை பார்த்து இறக்கினால், சுவையான சோயா மெத்தி சப்ஜி தயார்.
குறிப்பு:
* மீல் மேக்கரை சுடுநீரில் போட்டு ஊற வைப்பதற்கு பதிலாக, அதை குக்கரில் போட்டு நீரை ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ளலாம்.
* மாங்காய் தூள் இல்லாதவர்கள், இறுதியில் இறக்கிய பின் எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment