கேரளா ஸ்டைல் வறுத்து அரைச்ச முட்டை குழம்பு
வறுத்து அரைச்ச முட்டை குழம்பு கேரளாவில் மிகவும் பிரபலமான முட்டை குழம்பு. இதில் முட்டைகள் வேக வைக்கப்பட்டு, தேங்காய் மசாலாவுடன் சேர்த்து செய்யப்படுகிறது. உங்களுக்கு கேரளா சமையல்
மிகவும் பிடிக்குமானால், அதுவும் அசைவ உணவுகள் பிடிக்குமானால் வறுத்து அரைச்ச முட்டை குழம்பை வீட்டில் செய்து சுவையுங்கள். இந்த முட்டைக் குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, புல்கா, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் மசாலாவிற்கு...
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5
* கிராம்பு - 2
* பட்டை - 1 இன்ச்
* ஏலக்காய் - 2
* தேங்காய் - அரை மூடி (துருவியது)
கிரேவிக்கு...
* முட்டை - 4 (வேக வைத்தது)
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 5 பல் (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை
அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் மசாலாவிற்கு கொடுத்துள்ள சோம்பு, மல்லி, மிளகு, வரமிளகாய், கிராம்பு, பட்டை, ஏலக்காயைப் போட்டு ஒரு நிமிடம் நல்ல மணம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை சில நிமிடங்கள் வறுத்து இறக்கி, சில நிமிடங்கள் குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, கால் கப் நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* பின் தக்காளியை சேர்த்து, உப்பு மற்றும் சிறிது நீர் ஊற்றி,
மூடி வைத்து, தக்காளி மென்மையாகும் வரை வேக வைக்கவும்.
* தக்காளி நன்கு மென்மையாக வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி சில நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்கவும்.
* இறுதியில் வேக வைத்துள்ள முட்டைகளை சேர்த்து, ஒரு நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், கேரளா ஸ்டைல் வறுத்து அரைச்ச முட்டை குழம்பு தயார்.
No comments:
Post a Comment