பஞ்சாபி ஸ்டைல் காராமணி மசாலா
உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் காராமணி இருந்தால், அதைக் கொண்டு ஒரு அற்புதமான பஞ்சாபி ஸ்டைல் காராமணி மசாலா செய்யுங்கள்.
இந்த காராமணி மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* காராமணி - 1 கப்
*
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* பட்டை - 1/4 இன்ச்
* கிராம்பு - 1
மசாலாப் பொடிகள்:
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் காராமணியை நீரில் ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் தக்காளியை அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த தக்காளியை ஊற்றி, ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள காராமணியை போட்டு கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி குக்கரை மூடி மிதமான தீயில் 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, சிறிது காராமணியை மட்டும் எடுத்து, கரண்டியால் மசித்து, கிரேவியில் சேர்த்து, மீண்டும் அடுப்பில் வைத்து குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், பஞ்சாபி ஸ்டைல் காராமணி மசாலா தயார்.
No comments:
Post a Comment