பட்டாணி குழம்பு
தேவையான பொருட்கள்:
* உலர்ந்த மஞ்சள் பட்டாணி - 1 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* சாம்பார் பவுடர் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப் + தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* பூண்டு - 3 பல்
* இஞ்சி - 1/2 இன்ச்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* கிராம்பு - 1
* பட்டை - 1/2 இன்ச்
* ஏலக்காய் - 1
* தேங்காய் - 1/4 கப் (துருவியது)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் இரவு தூங்கும் முன் உலர்ந்த மஞ்சள் பட்டாணியை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை குக்கரில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சிறிது சேர்த்து,
குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள வெங்காய தக்காளி விழுதை சேர்த்து, ஒரு கப் நீர் ஊற்றி கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் சாம்பார் பவுடர் சேர்த்து நன்கு கிளறி, 15 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* இப்போது வேக வைத்துள்ள பட்டாணியை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின் கரம் மசாலா மற்றும்
கொத்தமல்லியை சேர்த்து ஒருமுறை கிளறிவிட்டு, 2 நிமிடம் குழம்பு ஓரளவு கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியில் கரண்டியால் பட்டாணியை நசுக்கி விட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பட்டாணி குழம்பு தயார்.
குறிப்பு:
* பட்டாணியை மென்மையாகும் அளவில் தான் வேக வைக்க வேண்டும்.
* உங்களிடம் சாம்பார் பவுடர் இல்லாவிட்டால், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
* உலர்ந்த மஞ்சள் பட்டாணிக்கு பதிலாக உலர்ந்த பச்சை பட்டாணியை அல்லது பிரஷ்ஷான பட்டாணி அல்லது சன்னா கூட பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment