மழை நேரத்தில் நினைத்த உடனே சுடச்சுட பிரியாணி சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் உடனே இந்த சேமியா பிரியாணியை செய்து சுவைத்துப் பாருங்கள்
மழை நேரத்தில் வீட்டில் இருக்கும் பொழுதுதான் விதவிதமாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதிலும் குளிர் காரணமாக சுட சுட, காரசாரமாக ஏதாவது சாப்பிட இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் உண்டாகும். அவ்வாறு பலருக்கும் சாப்பிடத் தோன்றும் ஒரு உணவு எதுவென்றால் பிரியாணி தான். இந்த பிரியாணியை நினைத்த உடன
ே செய்துவிட முடியாது. இதற்கு தேவையான பொருட்களை கடைக்குச் சென்று உடனடியாகவும் வாங்க முடியாது. எனவே வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்து பிரியாணி சுவையில் செய்யக்கூடிய இந்த சேமியா பிரியாணியை ஒருமுறை செய்து சுவைத்துப் பாருங்கள். இதன் சுவை அப்படியே பிரியாணியை சுவைப்பது போன்றே இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்: சேமியா – 500 கிராம், பெரிய வெங்காயம் – 250 கிராம், தக்காளி – 150 கிராம், பச்சை மிளகாய் – 7, இஞ்சி பூண்டு விழுது – ஒன்றரை ஸ்பூன், எண்ணெய் – 8 ஸ்பூன், நெய் – ஒரு ஸ்பூன், சோம்பு – ஒரு ஸ்பூன், பிரிஞ்சி இலை – 2, பட்டை சிறிய துண்டு – 1, கிராம்பு – 2, ஏலக்காய் – 2, ஜாதிபத்திரி – சிறிய துண்டு, கல்பாசி – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், புதினா – ஒரு கைப்பிடி, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி.
செய்முறை: முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்க வேண்டும். பிறகு கொத்தமல்லி மற்றும் புதினாவை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி வைக்கவேண்டும்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 8 ஸ்பூன் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும் ஒரு ஸ்பூன் சோம்பு, பிரிஞ்சி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, ஜாதிபத்ரி, கல்பாசி இவை அனைத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் ஒன்றரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் சேர்த்து நன்றாக வதங்கியதும் சுத்தம் செய்து வைத்துள்ள கொத்தமல்லி புதினாவையும் சேர்த்து எண்ணெயில் சுருண்டு வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தனி மிளகாய் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக
கொதிக்க வைக்கவேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து, சேமியாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் தட்டை போட்டு மூடி 5 நிமிடம் அப்படியே விட வேண்டும். பிறகு அடுப்பை அனைத்து விட்டு தட்டை திறக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான சேமியா பிரியாணி தயாராகி விட்டது.
No comments:
Post a Comment