wheat-idli(வெறும் 10 நிமிஷம் போதுங்க. சூப்பரான சாஃப்டான கோதுமை மாவில் செய்த இட்லி தயார்.) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday 3 October 2021

wheat-idli(வெறும் 10 நிமிஷம் போதுங்க. சூப்பரான சாஃப்டான கோதுமை மாவில் செய்த இட்லி தயார்.)

wheat-idli

வெறும் 10 நிமிஷம் போதுங்க. சூப்பரான சாஃப்டான கோதுமை மாவில் செய்த இட்லி தயார்.


வீட்ல இட்லி மாவு இல்லையா. கவலையே வேண்டாம். மிக மிக சுலபமாக சட்டென செய்யக்கூடிய கோதுமை மாவு இட்லி ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கோதுமை மாவில் சப்பாத்தி, பூரி தான் செய்து சாப்பிடுவோம். மிஞ்சிப்போனால் கோதுமை தோசை செய்வோம். ஆனால் அந்த கோதுமை மாவில் இட்லி சுட்டு சாப்பிட்டால் எப்படி இருக்கும். யோசித்துப்பாருங்கள், வாங்க ரெசிபியை மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கலாம்.

முதலில் 1 கப் அளவு கோதுமை மாவை எடுத்து கொள்ள வேண்டும். 300 கிராம் அளவு கோதுமை மாவுக்கு பின் சொல்லக்கூடிய அளவுகள் சரியானதாக இருக்கும். 300 கிராம் அளவு மாவு எடுத்து இட்லி சுட்டால் மூன்றிலிருந்து நான்கு பேர் தாராளமாக சாப்பிடலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தயாராக எடுத்து வைத்திருக்கும் கோதுமை மாவை போட்டு, வாசம் வரும் வரை வறுக்க வேண்டும். கோதுமை மாவின் நிறம் மாறி விடக்கூடாது. அதேசமயம் கோதுமை மாவும் வறுபடவேண்டும். வறுத்த இந்த மாவை அகலமான ஒரு பவுலில் கொட்டி நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக அதே கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அந்த எண்ணெய் காய்ந்ததும் உளுந்து – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய மல்லித்தழை, பொடியாக துருவிய கேரட் – 1, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, எல்லா பொருட்களையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும். வதங்கிய இந்த பொருட்களை 5 நிமிடங்கள் அப்படியே ஆறவைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

முதலில் வறுத்து வைத்திருக்கிறோம் அல்லவா கோதுமை மாவு, சூடு ஆறியதும் அதை இப்போது கரைக்கவேண்டும். கோதுமை மாவுக்கு தேவையான அளவு உப்பை போட்டுக்கொண்டு, 1/4 கப் அளவு அதிகமாக புளிக்காத தயிரை ஊற்றி, முதலில் நன்றாக கோதுமை மாவை கலந்து விட வேண்டும். அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி, உங்கள் கையாலேயே வைத்து கோதுமை மாவை இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளுங்கள். மாவை கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இந்த மாவில் 1/4 ஸ்பூன் அளவு சமையல் சோடாவையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக வதக்கி ஆற வைத்திருக்கும் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு கேரட் சேர்த்த தாளிப்பு கலவையை இப்போது மாவுடன் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக கலந்து விடுங்கள். அவ்வளவு தான் நமக்கு இட்லி வார்ப்பதற்கு தேவையான மாவு தயார் ஆகிவிட்டது. வழக்கம் போல இட்லி தட்டில் நெய் அல்லது எண்ணெயை தடவி இந்த மாவை வார்த்து ஆவியில் ஏழிலிருந்து எட்டு நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் சூப்பரான சாஃப்டான கோதுமை மாவு இட்லி தயார்.

No comments:

Post a Comment