ஆரோக்கியமான, நாவிற்கு சுவை தரும் வெந்தய தோசை செய்வது இவ்ளோ ஈசியா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் போச்சே.
உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து, ஆரோக்கியத்தை தரக்கூடிய அருமையான வெந்தய தோசை எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த வெந்தய தோசை பன் தோசை போல மொத்தமாக தான் நம்மால் சுட முடியும். இந்த வெள்ளை அப்பம் இருக்கும் அல்லவா, பார்ப்பதற்கு அதேபோல் தான் இருக்கும். ஆனால் வெந்தயத்தின் வாசம் இந்த தோசையில் அதிகமாக வீசும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த தோசையை சாப்பிடலாம். உடலுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. உங்களுக்கும் இந்த ரெசிபியை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதா. இப்போதே தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
முதலில் 2 கப் அளவு இட்லி அரிசிக்கு, 2 டேபிள் ஸ்பூன் அளவு நமக்குப் வெந்தயம் தேவைப்படும். அதாவது 1/2 கிலோ இட்லி அரிசி. இந்த தோசைக்கு
தேவையான அளவு உப்பு அவ்வளவுதான். இது இருந்தாலே போதும் சூப்பரான வெந்தய தோசையை செய்து விடலாம்.
இட்லி அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு மூன்று முறை நன்றாக கழுவி நல்ல தண்ணீரை ஊற்றி ஊறவைத்து விடுங்கள். 4 மணிநேரம் இட்லி அரிசி ஊற வேண்டும். அதன் பின்பு 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு முறை கழுவி விட்டு, அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அப்போதுதான் வெந்தயம் மொழுமொழுவென மைய அரைபட்டு பொங்கிவரும்.
வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை ஊற்றி தான் வெந்தயத்தை அரைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இப்போது இந்த இரண்டு பொருட்களும் ஊறிய பின்பு கிரைண்டரில் போட்டு மாவை அரைத்து எடுத்துக் கொள்ளலாம். மிக்ஸி ஜாரில் போட்டு மாவை அரைத்து எடுத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்தான். கட்டாயமாக வெந்தயத்தையும் இட்லி அரிசியையும் தனித்தனியாகத்தான் ஆட்டி எடுக்க வேண்டும்.
முதலில் மிக்ஸி ஜாரில் ஊற வைத்திருக்கும் வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின்பு, தேவைப்பட்டால் வெந்தயத்துடன் இன்னும் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி புசுபுசுன்னு உளுந்து மாவு போல ஆட்டி எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்தபடியாக ஊற வைத்திருக்கும் இட்லி அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு 90 சதவிகிதம் மைய அரைத்துக் கொள்ளவேண்டும். இதையும் அரைத்து வெந்தயத்துடன் சேர்த்து, மாவுக்கு தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கரைத்து 8 மணி நேரம் வைத்துவிட வேண்டும். இட்லி மாவு அரைத்து புளிக்க வைப்போம் அல்லவா அதுபோல்தான்.
புளித்து வந்த இந்த மாவை நன்றாக கலந்துவிட்டு தோசைக்கல்லில் கல் தோசை போல வார்த்து ஒரு நிமிடம் கழித்து, அதன் மேல் எண்ணெய் ஊற்றி ஆப்பத்திற்கு மூடி போட்டு வேக வைப்பது போல 2 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சூப்பரான வெந்தய தோசை தயார்.
இதனுடைய சுவை சாதாரண தோசை போல இருக்காது. கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
No comments:
Post a Comment