நவராத்திரி ஸ்பெஷல்: ஜவ்வரிசி சுண்டல்
தேவையான பொருட்கள்:
* ஜவ்வரிசி - 1 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை நன்கு பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, பருப்பு மூழ்கும் வரை நீரை ஊற்றி, உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும். அப்படி வேக வைக்கும் போது பருப்பானது பார்க்கும் போது முழுசாகவும், அழுத்தும் போது மென்மையாகவும் இருக்கும் அளவு வேக வைத்து இறக்க வேண்டும். பொதுவாக பாசிப்பருப்பு வேக 3-5 நிமிடம் எடுக்கும்.
* பின் ஜவ்வரிசியை நீரில் அலசி, குறைந்தது 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். முக்கியமாக ஜவ்வரிசியில் அளவுக்கு அதிகமாக நீர் ஊற்றி விட வேண்டாம். ஜவ்வரிசி மூழ்கும் வரையில் மட்டும் நீர் ஊற்றினால் போதும். இல்லாவிட்டால், ஜவ்வரிசி அளவுக்கு அதிகமான நீரை உறிஞ்சி குலைந்துவிடும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ஜவ்வரிசி சுண்டல் தயார்.
No comments:
Post a Comment