சுவையான சீரக சாதம் 10 நிமிஷத்துல எப்படி செய்வது? இதை ‘ஜீரா புலாவ்’ என்று கூட சொல்வார்கள்.
தினமும் குழம்பு, சாதம், சாம்பார், ரசம் என்று ஒரே மாதிரி சாப்பிடுவதை விட கொஞ்சம் வித்தியாசமாக சமைத்து தான் பார்ப்போமே. சீரகத்தை வைத்து சீரக சாதம் ரொம்ப ரொம்ப ஈஸியா 10 நிமிஷத்துல, குக்கரில் 2 விசில் வைத்து செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த சீரக சாதம் செஞ்சிட்டு சைடிஷா ஒரு நல்ல கிரேவியை வச்சுக்கலாம். நம்ம இஷ்டம் தான். மஸ்ரூம் கிரேவி, சிக்கன் கிரேவி, பன்னீர் கிரேவி, மட்டன் கிரேவி, வெஜிடபிள்
குருமா, எதனுடன் வேண்டுமென்றாலும் இந்த ஜீரா புலாவை சாப்பிடலாம்.
இந்த சீரக சாதம் செய்வதற்கு முதலில் 1 கப் அளவு பாசுமதி அரிசியை தண்ணீரில் போட்டு 20 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்தபடியாக குக்கரை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் எண்ணெய், 2 ஸ்பூன் – நெய், ஊற்றி காய விட வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் பட்டை – 2 துண்டு, அன்னாசிப்பூ – 1, ஏலக்காய் – 2, பிரியாணி இலை – 2, சீரகம் – 1 ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, பச்சை மிளகாய் – 2 கீனியது, இந்த பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். சீரக சாதம் என்பதால் சீரகத்தின் வாசனை கொஞ்சம் தூக்கலாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்தபடியாக ஊறிய பாசுமதி அரிசியை குக்கரில் போட்டு ஒரு நிமிடம் போல லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். அரிசியை உடைக்காமல் மெதுவாக வறுத்து 1 கப் பாசுமதி அரிசிக்கு, 1 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு குக்கரை மூடி இரண்டு விசில் விட்டால் போதும். சூப்பரான ஜீரா ரைஸ் தயார். அடுப்பை முழுமையான தீயில் வைத்து 2 விசில் வையுங்கள். மிதமான தீயில் வைத்தால் ஒரு விசில் விட்டாலும் போதும். அரிசி வெந்து விடும்.
மேலே கொத்தமல்லி தழைகளைத் தூவி சுடச்சுட பரிமாறி பாருங்கள்.
இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் பாசுமதி அரிசி இல்லை என்றால், பச்சரிசியிலும் இந்த ரெசிபியை செய்யலாம். சாப்பாட்டு அரிசியிலும் இந்த ரெசிபியை செய்யலாம்.
அரிசிக்கு தகுந்தவாறு தண்ணீரை மாற்றி, விசில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த குறைப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்லயும் ட்ரை பண்ணி பாருங்க.
No comments:
Post a Comment