கோயம்புத்தூர் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார்
சாதத்துடன் சேர்த்து சாப்பிட சிறந்த காம்பினேஷன் என்றால் அது சாம்பார் தான். அந்த சாம்பார் தென்னிந்தியாவில் பல விதங்களில் தயாரிக்கப்படுகிறது. அதில் கோயம்புத்தூர் ஸ்டைல் வித்தியாசமான செய்முறையைக் கொண்டிருப்பதோடு, சுவையும் வித்தியாசமாக இருக்கும். உங்களுக்கு கோயம்புத்தூர் ஸ்டைல் சாம்பாரை உங்கள் வீட்டில் செய்ய வேண்டுமென்று ஆசையாக உள்ளதா?
கீழே கோயம்புத்தூர் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த சாம்பாரை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முருங்கைக்காய் - 1 (நீளத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* துவரம் பருப்பு - 1 கப்
* கறிவேப்பிலை - சிறிது* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கெட்டியான புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
* நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் 15 முதல் 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் துவரம் பருப்பைக் கழுவி குக்கரில் போட்டு, 2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முருங்கைக்காய், வெங்காயம், தக்காளி மற்றும் போதுமான அளவு நீரை ஊற்றி 10 நிமிடம் காய்கறி வேகும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், மல்லி, வெந்தயம், பெருங்காயத் தூள், வரமிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, காய்கறி வேக வைத்த நீரை சிறிது ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அரைத்த மசாலாவை வெங்காயம் தக்காளி உள்ள வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, அதில் வேக வைத்துள்ள துவரம் பருப்பு மற்றும் புளிச்சாறு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* சாம்பார் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சாம்பாருடன் சேர்த்து மீண்டும் சாம்பாரை ஒரு 5-7 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே நெய் ஊற்றினால், சுவையான கோயம்புத்தூர் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார் தயார்.
No comments:
Post a Comment