செட்டிநாடு ஸ்டைல் பெப்பர் காளான்
தமிழ்நாட்டில் செட்டிநாடு ரெசிபிக்கள் மிகவும் தனித்துவமான சுவையுடன் சற்று காரமாக இருக்கும். இதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் தான். உங்களுக்கு செட்டிநாடு ரெசிபிக்கள் பிடிக்குமா? செட்டிநாடு ரெசிபிக்களை வீட்டில் செய்ய விரும்புகிறீர்களா? அதுவும் சப்பாத்திக்கு பொருத்தமான செட்டிநாடு ரெசிபி எதுவாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் அதற்கு செட்டிநாடு ஸ்டைல் பெப்பர் காளான் சரியான தேர்வாக இருக்கும். இந்த ரெசிபி சப்பாத்திக்கு மட்டுமின்றி, மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதற்கும் அட்டகாசமாக இருக்கும்.
உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் பெப்பர் காளான் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ஸ்டைல் பெப்பர் காளானின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பட்டன் காளான் - 1 கப் (சுத்தம் செய்து துண்டுகளாக்கப்பட்டது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
* பிரியாணி இலை - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 4 டீஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - 1
* ஜாவித்ரி - 1
* ஜாதிக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
மசாலாவிற்கு....
* சின்ன வெங்காயம் - 10
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 2 இன்ச்
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் 'வறுத்து அரைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களை ஒரு வாணலியில் போட்டு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் 'மசாலாவிற்கு' கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு தக்காளி மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு, நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள வெங்காய மசாலாவை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து வறுத்து பொடி செய்து வைத்துள்ளதை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீர் சேர்த்து நன்கு பத்து நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து கிளறி, மூடி வைத்து காளானை வேக வைக்க வேண்டும்.
* காளான் நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் பெப்பர் காளான் தயார்.
No comments:
Post a Comment