மழைக் காலத்துக்கு இப்படி இஞ்சி சட்னி செஞ்சு கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்லுவாங்க? ஆரோக்கியம் தரும் சுவையான இஞ்சி சட்னி 10 நிமிடத்தில் செய்வது எப்படி?
இந்த மழை காலத்திற்கு சுடசுட உணவு வகைகளை பரிமாறும் பொழுது இதமாக உணர்கிறோம். அதே போல இந்த இஞ்சி சட்னியை சூடான இட்லி, தோசை, அடை போன்றவற்றுடன் பரிமாற அவ்வளவு சூப்பராக இருக்கும். இஞ்சியின் மருத்துவ குணங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆரோக்கியம் நிறைந்த இந்த இஞ்சி சட்னியை இது போன்ற கிளைமேட்டில் சாப்பிடும் பொழுது உடலும், உள்ளமும் இதம் பெறும். இப்படி ஒரு சுவையில் இஞ்சி சட்னியை செய்து கொடுத்தால் 10 இட்லி கூட பத்தாது.
இந்த இஞ்சி சட்னியை எப்படி செய்வது? என்பதை நாமும் அறிந்து கொள்ள தொடந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
இஞ்சி சட்னி செய்ய தேவையான பொருட்கள்: சமையல் எண்ணெய் – தேவையான அளவு, இஞ்சி – ஒரு விரல் அளவிற்கு, உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், பூண்டு பற்கள் – 8, சீரகம் – ஒரு டீஸ்பூன், வர மிளகாய் – 3, புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, பொடித்த வெல்லம் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – ஒன்று.
இஞ்சி சட்னி செய்முறை விளக்கம்: முதலில் ஒரு விரல் அளவிற்கு இஞ்சியை எடுத்து தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் வெட்டி வைத்துள்ள இஞ்சித் துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சியின் பச்சை வாசம் போனதும், உளுந்தம் பருப்பு, பூண்டு பற்கள் தோலுரித்து சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
உளுந்து பொன்னிறமாக சிவக்க வறுபட்டதும் அதனுடன் ஒரு டீஸ்பூன் சீரகம், காரத்திற்கு ஏற்ப வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து வதக்க வேண்டும். ஒரு நிமிடம் நன்கு வதங்கியதும் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதைகளை நீக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதனை உதிர்த்து இதனுடன் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். புளி வதங்கியதும் அரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் கொதித்து வரும் பொழுது பொடித்து வைத்த வெல்லத்தை சேர்த்து கரைக்க வேண்டும். வெல்லம் கரைந்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து ஆற விட வேண்டியது தான். இவை நன்கு ஆறியதும் மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கெட்டியாக நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெல்லம் சேர்ப்பதால் இஞ்சியின் உடைய காரமும், மிளகாய் உடைய காரமும் நமக்கு அவ்வளவாக தெரியாது. மேலும் சட்னியின் சுவையும் அதிகரிக்கும்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும், உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலையை
கழுவி உருவி சேர்த்து தாளிக்க வேண்டும். ஒரே ஒரு வர மிளகாயை கிள்ளி சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டி ஒரு கலக்கு கலக்கி வைத்தால் போதும்! சுவையான இஞ்சி சட்னி தயாராகிவிடும். அவ்வளவுதாங்க ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த இஞ்சி சட்னியை நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விடலாமே!
No comments:
Post a Comment