வெங்காயம், பூண்டு இல்லாமல் இப்படி ஒரு முறை தக்காளி சாதம் செய்து பாருங்கள்! 10 நிமிடத்தில் சுவை மிகுந்த கலவை சாதமா?
வெங்காயம், பூண்டு இல்லாமல் ஒரு தக்காளி சாதமா? என்று ஆச்சரியப்பட வேண்டாம். ஒரு சிலர் வெங்காயம், பூண்டு உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும் தெய்வீக பிரசாதங்களுக்கு கலவை சாதம் செய்யும் பொழுது கூடுமானவரை பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து செய்வதை தவிர்ப்பது நல்லது. அந்த வகையில் இந்த தக்காளி சாதம் பத்தே நிமிடத்தில் சட்டென அதீத சுவையுடன், வித்தியாசமான முறையில் குக்கரில் செய்து அசத்தி விடலாம். வெங்காயம், பூண்டு இல்லாத தக்காளி சாதம் எவ்வாறு செய்வது? என்பதை நீங்களும் அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.
தக்காளி சாதம் செய்ய தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி – ஒரு கப், துவரம் பருப்பு – கால் கப், பச்சை மிளகாய் – 2, நறுக்கிய இஞ்சி – 2 டேபிள்ஸ்பூன், தக்காளி – கால் கிலோ, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவிற்கு, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், வர மிளகாய் – 3, முந்திரி பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, மல்லித்தழை – சிறிதளவு. - Advertisement - தக்காளி சாதம் செய்முறை விளக்கம்: முதலில் நீங்கள் சாப்பாடு செய்யும் சாதாரண புழுங்கலரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த அரிசியை நன்கு தண்ணீர் வடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் கால் கப் அளவிற்கு துவரம் பருப்பை அலசி இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். குக்கரில் வேக வைக்க இருப்பதால் துவரம் பருப்பை ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை.
தோல் நீக்கி சுத்தம் செய்த இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் பச்சை மிளகாய்களை இரண்டாகக் கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம், பூண்டு எதுவும் சேர்க்காமல் தக்காளி மட்டும் பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். ஐந்து மீடியம் சைஸ் தக்காளி எடுத்தால் சரியாக இருக்கும். பிறகு மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து பின்னர் இந்த சாதத்திற்கு தேவையான அளவிற்கு உப்பை போட்டுக் கொள்ளுங்கள்.
பொதுவாக ஒரு ஆழாக்கு புழுங்கல் அரிசிக்கு 2 ஆழாக்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைத்தால் சரியாக இருக்கும். ஆனால் இதில் பருப்பு மற்ற காய்கறிகள் எல்லாம் சேர்த்து உள்ளதால் கூடுதலாக ஒரு பங்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது ஒரு கப் புழுங்கல் அரிசிக்கு, மூன்று கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் குக்கரை மூடி வைத்து 3 விசில் வரை விடுங்கள். பிரஷர் முழுவதும் அடங்கியதும் குக்கரை திறந்து பார்த்தால் பொலபொலவென்று தக்காளி சாதம் சூப்பராக வெந்திருக்கும். அவற்றை ஒரு முறை கலந்து விட்டு கொள்ளுங்கள்.பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்ததும் சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து வர மிளகாய்களை கிள்ளிப் போட்டு கொள்ளுங்கள். பின்னர் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழைகளை தூவி கலந்து பரிமாறினால் அட்டகாசமான சுவையுடன் கூடிய வித்தியாசமான தக்காளி சாதம் தயாராகி விடும். நீங்களும் இதே முறையில் ஒருமுறை வீட்டில் செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.
No comments:
Post a Comment