சுவையான சிறுகீரை கடையல். ஒரு முறை இந்தப் பக்குவத்தில் செய்து பாருங்கள்
உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவு வகைகளை அன்றாடம் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்களும் அறிவுரை சொல்ல தான் செய்கிறார்கள். ஆனால் அதனை நாம் பின்பற்றுகிறோமா என்று பார்த்தால் பலரும் கிடையாது என்றே சொல்லலாம். வேலைக்கு செல்லும் அவசரத்திலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும், கணவரை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற வேகத்திலும் ஏதாவது ஒரு அவசர சமையலை செய்து முடித்து அவர்களை அனுப்பி விடுகிறோம். ஆனால் ஒவ்வொரு நாளும் நமது உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து முழுமையாக கிடைக்கிறதா என்று பார்த்தோம் என்றால் அது இல்லை. இவ்வாறு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை தரக்கூடிய கீரை வகைகளை வாரத்திற்கு
இரண்டு முறையாவது சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி காலை வேளையிலும் சுலபமாக செய்யக்கூடிய சிறுகீரை கடையலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்: சிறு கீரை – ஒரு கட்டு, துவரம்பருப்பு – ஒரு டம்ளர், வெங்காயம் – 2, தக்காளி – 3, பச்சைமிளகாய் – 5, புளி – எலுமிச்சை பழ அளவு, பூண்டு – பத்து பல், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரைஸ்பூன் எண்ணெய் – 3 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன். -
- செய்முறை: முதலில் சிறுகீரையின் இளம் காம்பு பகுதியை விடுத்து மற்ற பகுதிகளை நீக்கி விட வேண்டும். பின்னர் சிறு துண்டுகளாக அனைத்தையும் கிள்ளிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு கீரையை அதில் சேர்த்து இரண்டு, மூன்று முறை நன்றாக அலசி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம் மற்றும் தக்காளியை நான்கு துண்டுகளாக அரிந்து வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரில் ஒரு டம்ளர் துவரம்பருப்பை சேர்த்து நன்றாகக் கழுவிக் கொண்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பின் மீது வைத்து வேக வைக்க வேண்டும்.பருப்பு பாதி அளவு வெந்ததும் அதனுடன் அலசி வைத்துள்ள கீரையை சேர்க்க வேண்டும். அதன்பின் அறிந்து வைத்துள்ள தக்காளி, வெங்காயம் சேர்த்து இதனுடன் பச்சைமிளகாய், 5 பல் பூண்டு, புளி மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து குக்கரை மூடி விசில் போட வேண்டும்.குக்கர் 4 விசில் வந்ததும் குக்கரை இறக்கி வைத்து, அதில் பிரஷர் போனதும் கொக்கரை திறந்து மத்தை வைத்து கீரையை கடைந்து விட வேண்டும். பிறகு ஒரு தாளிக்கும் கரண்டியை
அடுப்பின் மீது வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளித்து கடைந்து வைத்துள்ள கீரையில் சேர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment