ருசியான... தவா பன்னீர் மசாலா
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 1 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (அரைத்துக் கொள்ளவும்)
* குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 3/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* காய்ந்த வெந்தய கீரை - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* தவா பன்னீர் மசாலா செய்வதற்கு முதலில் தவா தேவை. ஒருவேளை தவா இல்லாவிட்டால், கடாயை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இப்போது ரெசிபிக்கு போகலாம்.
* அடுப்பில் தவாவை வைத்து, அதில் வெண்ணெயைப் போட்டு உருகியதும், சீரகத்தைப் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு, நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து ஒருமுறை கிளறி, மிளகாய் தூள், சீரகப் கொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
* தக்காளி நன்கு வெந்து பச்சை வாசனை போன பின், மசாலாவானது நீரின்றி வறண்டு இருக்கும். அப்போது சிறிது நீர் தெளித்து, பன்னீர் துண்டுகளை சேர்த்து, மசாலா பன்னீருடன் சேருமாறு நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியில் அதன் மேல் காய்ந்த வெந்தய கீரையை
கையால் நசுக்கி தூவி, கொத்தமல்லியையும் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான தவா பன்னீர் மசாலா தயார்!
குறிப்பு:
* மசாலா பொடிகளை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
* மேலே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு செமி கிரேவி. உங்களுக்கு கிரேவி அதிகம் வேண்டுமானால், இன்னொரு தக்காளியை அரைத்து ஊற்றலாம்.
* தக்காளியை அரைத்து ஊற்ற விரும்பாதவர்கள், அப்படியே துண்டுகளாக்கியும் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment