பஞ்சாபி சோலே மசாலா
உங்கள் வீட்டில் இன்று இரவு புல்கா, நாண் அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் மிகவும் பிரபலமான வட இந்திய உணவான பஞ்சாபி சோலே மசாலா செய்யுங்கள். இதை தென்னிந்தியாவில் சன்னா மசாலா என்று அழைப்பதுண்டு. உங்களுக்கு பஞ்சாபி சன்னா மசாலா ரொம்ப பிடிக்குமா? அதை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே பஞ்சாபி சோலே மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கொண்டைக்கடலை/சன்னா - 3/4 கப்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
* தக்காளி - 2-3 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
* வரமிளகாய் - 2
* மல்லி விதைகள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* பட்டை - 1 இன்ச்
* கருப்பு ஏலக்காய் - 1
* மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் கொண்டைக்கடலையை இரவு முழுவதும் அல்லது குறைந்தது 6 மணிநேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின் அதை குக்கரில் போட்டு நீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மாங்காய் தூள் தவிர வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் தக்காளியை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அரைத்த தக்காளியை சேர்த்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, மிதமான தீயில் எண்ணெய் தனியாக பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் வேக வைத்துள்ள கொண்டைக்கடலையை சேர்த்து, அதோடு அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்பு சிறிது கொண்டைக்கடலையை கரண்டியால் மசித்து விட்டு, 2-3 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, மேலே மாங்காய் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பஞ்சாபி சோலே மசாலா தயார்.
No comments:
Post a Comment