உருளைக்கிழங்கு தால்
உருளைக்கிழங்கு உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? உருளைக்கிழங்கு கொண்டு ஆரோக்கியமான ஒரு சைடு டிஷ் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் உருளைக்கிழங்கு தால் செய்யுங்கள். இது சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இந்த தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். அதோடு இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.
உங்களுக்கு உருளைக்கிழங்கு தால் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு தால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* உருளைக்கிழங்கு - 1 (பெரியது மற்றும் நறுக்கியது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதை குக்கரில் போட்டு, அத்துடன் நறுக்கிய உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் ஒரு கப் நீர் ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள தால் உடன் சேர்த்து கிளறினால், சுவையான உருளைக்கிழங்கு தால் தயார்.
No comments:
Post a Comment